வணக்கங்கள் நண்பர்களே..!
A.P.J.அப்துல் கலாம்...இந்த நாமம் தான் இந்த மூன்று நாட்களில் இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்பட்டதாக இருக்கும்..! கனவுகளின் காதலருக்கு, காமிக்ஸ் காதலர்கள் அனைவரின் சார்பாக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..!
அவரின் மரணம்..எனக்கு என் முதல் கனவை நினைவுட்டிவிட்டது. பதினான்கு வயதில் நான் கண்ட கனவு என்னதெரியுமா..? மரணம் பற்றியது, என் மரணம் பற்றியது. எப்போது என் மரணம் நிகழவேண்டும் என்பது பற்றியது. மறைந்த கலாம் வாழ்ந்த 84 வயதே என் வாழ்நாள் இலக்கும்..! 84 வயதுவரையில் வாழவேண்டும் என..என் சிறுவயதிலேயே நான் கனவுகாண காரணம்...
என்னுடன் விளையாடி,உரையாடி,விவாதித்து, பட்டாசு வெடித்து, உடற்பயிற்சி செய்து,உணவில் பங்கு கொடுத்து...உலகின் பல விஷயங்களை அறிமுகப்படுத்திய..என் வயோதிக நண்பரின் மரணமே நான் பார்த்த முதல் மரணம்..!அந்த மரணத்தை பார்த்தபின், அவர் வாழ்ந்த 84 வருடங்கள் போலவே நாமும் வாழவேண்டும் என்ற கனவு அன்று முளைத்தது. நான் வருந்திய அந்த முதல் மரணம் வேறுயாருடையதுமல்ல...என் தாத்தா தான்..!
நான் பார்த்த வயோதிக நண்பரின் மரணம்.. விரும்பியதை படித்துக்கொண்டே அவர் உயிர் பிரிந்தது. அவ்விதமே 'கலாம்' தனக்கு பிடித்ததை பேசிக்கொண்டே உயிர் துறந்தார். எனக்கும் அப்படியொரு மரணம் கொடு 'பராசக்தி'..! 84 வயதில் விரும்பியதை படித்துக்கொண்டே மரணம்..! அதுவும் காமிக்ஸ்படித்துக்கொண்டே மரணம்..தா..தேவி..! என்பதே நான் கண்ட முதல் கனவு..! படிப்பதற்கு நகைப்பாகவே இருக்கும்...நெருங்கிய நண்பர்களுக்கு இது...கவர்ச்சி வரிகள் அல்ல என்பது நன்கு தெரியும்..!
பதினான்கு வயதில் நான் கண்டகனவை நிஜமாக்க...அன்று தொட்டு என் இளமை நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்..!என் இலக்கை அடையும் கடைசி நேரத்திலும்...என் மனதில் வயோதிகம் நெருங்கவிடாமல் காக்க, நான் கண்ட தங்கபஸ்பம், பதினான்கு வயதில் துவங்கிய இந்த பயணத்தின் நினைவுகளை என்றும் மறக்காமல் பாதுகாத்து வருவதே..! அந்த நினைவுகளை மீட்டெடுக்க என்னிடமுள்ள ஒரு மந்திரசாவி தான் காமிக்ஸ்..!
இந்த காமிக்ஸ் உலகில் நான் பெற்றவை ஏராளம்..! விசா வாங்காமலே...பல நாடுகளுக்கு பயணித்துள்ளேன். எந்த ஆயுதமும் ஏந்தாமலேயே பல போர்களங்களில் சண்டையிட்டுள்ளேன். எந்த ஸ்தாபனத்திலும் சேராமல், பல சர்வதேச மர்மங்கள் துப்பறிந்தவர்களுடன் பயணித்திருக்கிறேன். பதட்டமான பல நெருக்கடிகளை..சிறுதும் பதறாமல் தாண்டும் கலையை பல நாயகர்கள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நெஞ்சில் குண்டு பாயாமலேயே வலியில் துடித்திருக்கிறேன்..! பூமியை தாண்டாமலேயே பல கிரகங்கள் பார்த்திருக்கிறேன். இழப்புகள் எதுவுமின்றி கண்ணீருடன் உறக்கத்தை தொலைத்திருக்கிறேன். மரணத்தை கனவுகண்ட எனக்கு..வாழ்க்கைகனவை காமிக்ஸ் எளிதாக்கியது என்பதே நிஜம்..!
இந்த காமிக்ஸ் உலகில் நான் பெற்றவைக்கு கைமாறாக... பிரதிபலனாக நான் செய்யும் சின்ன முயற்சிகள், இந்த காமிக்ஸ் உலகை வளர்க்க செய்யும் சின்ன கால்தடம்... பார்ப்பவர்களுக்கு, என்னை வளர்த்துக்கொள்ள காமிக்ஸை பயன்படுத்துவதாக தோன்றுவது யதார்த்தமே..! தவறேதுமில்லை..! எந்த விதமானவளர்ச்சியாக இருந்தாலும்கூட, சேவை என வந்துவிட்டால் விமர்சனம் என்பது பொதுவே என்ற உண்மையை நான் உணர்ந்தேயிருக்கிறேன்..!
கடந்த வாரம் திரு விஜயன் அவர்கள் நம் முன்னே மூன்று கேள்விகள் வைத்தார்..! காமிக்ஸ் உலகின் எதிர்காலத்தை மாற்றபோகும் அந்த முக்கிய கேள்விகள் இதோ...
1.சீரான விலையோடு, இரண்டல்லது / மூன்று பாகங்களாய் டெக்சின் கதைகள் தொடர்கதைகளாய் வலம் வர செய்யலாமா?
2.Maxi டெக்ஸ் ; Color டெக்ஸ் ; Giant டெக்ஸ் என்று விதவிதமான format-களில் இத்தாலியில் அவர்கள் செய்யும் அதகளங்களைப் பார்த்து நாமும் சூடு போட்டுக் கொள்ளாது – நமக்கு ஏற்றதொரு பார்முலாவாக அமைத்துக் கொள்ளக்கூடியது தான் எதுவாக இருக்க முடியும் ?
3.‘தேவையானோர் முன்பதிவு செய்து வாங்கிக் கொள்ளலாம்‘ என சந்தாக்களோடு சம்பந்தப்படுத்தாது ஒரு தனிப்பட்ட ‘புல்லட் டிரெயின்‘ தடத்துக்கு TEX -ன் கூடுதல் எண்ணிக்கைகளைத் திசைதிருப்பினால் நலம் தருமா?
.....அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் தேடிய விடை, பெரும்பாலான காமிக்ஸ் காதலர்களின் கனவாவே எனக்கு தோன்றியது..! அதை எழுத்துக்களால் சிலைவடிக்காமல்...டெக்ஸ் வில்லரும் கார்சனும் இது குறித்து பேசுவது போல ஒரு முயற்சியை துவங்கினேன். பலரின் கனவை, பிடித்த பார்முலாவை உருவம் கொடுக்க முயன்றபோது...APJ.கலாமின் மறைவு..என் கனவை விருச்சகமாக வளர்த்துவிட்டது.
அந்த கனவின் உருவம்..இதோ....
இந்த பதிவின் நோக்கம் : "முகமூடி அணிந்தவர்களின் பின்னால் எப்போதுமே உயிர்ப்புடன் ஒரு சர்ப்பம் துடித்துக்கொண்டே இருக்கும், அது யார் மீதுவேண்டுமானாலும் வீசப்பட்டு திசைதிருப்பபடும்" என்ற கசப்பை நிரூபிக்கும் விதம், மீண்டும் திரு:விஜயன் மீது "இன்னும் வரப்போகும் நாட்களில், புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்க வரும் வாசகர் வட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தே போகும் என்பதிலும் சந்தேகம் ஏது ?" என ஒரு சர்ப்பம் வீசப்பட்டது..! இதற்கு நேர் எதிர்திசையில் பயணிக்க வைக்கும் வலிமையான கனவே இந்த பதிவு..!
இந்தகனவு மெய்ப்பட கைகொடுங்கள் தேழர்களே..! இந்த கனவு ஒரு புரட்சியோ, பிரார்த்தனையோ, உரிமையோ அல்ல..! நிறைவேற்றவேண்டிய கடமை..! இந்த ஒரு முறை மட்டும் "அருமை,அசத்தல்,அசாத்தியம், பாராட்டுகள், தொடருங்கள்" என்ற சாதாரண வரிகளை தாண்டி...காமிக்ஸ் பற்றிய உங்கள் கனவுகளை ஒரு வரியேனும் பகிருங்கள் நண்பர்களே..!
நட்புடன்
மாயாவி.சிவா
குறிப்பு: காதில் விழுந்த பலகருத்துகளை..நண்பர்கள் சொல்வதுபோல் கற்பனையில் அமைத்துள்ளேன். விருப்பமில்லாத கருத்தின் கீழ் உங்கள் பெயர் இருப்பின் மன்னிக்க..! நீக்கவேண்டிய கட்டாயம் or மாற்றவேன்டியவை பற்றி தெரிவிக்க..!
இலவச..ஸாரி..ஸாரி...ஸ்பெஷல் இணைப்பு : இவ்வளவு நீளமா நான் நீட்டி சொல்லியும், அந்த பார்முலாவை என்னால பளிச்சின்னு சொல்லமுடியலை...அதை இத்தாலி விஜய் அருமையா சொல்லிட்டார்...அவை ஜாலியாய் கீழே....