தீபாவளி என்றாலே இனிப்பு,புத்தாடை, பட்டாசு, குண்டாய் ஒரு டெக்ஸ் புக்..! என்பதே தமிழ் காமிக்ஸ் காதலர்களின் இலக்கணமாகிவிட்டாலும், இந்த வருடம் அது வலுவாகி விஸ்வரூபமாகிவிட்டது..! காரணம்...
* the லயன் 250 யில் 680 பக்க கலர் டெக்ஸ் கலக்கல் என துவங்கி...
* வரும் வருடம் பெல்ஜியம் சைஸில் 'TEX' வண்ணபதிப்பு ஒன்று...
* மறுபதிப்பில் குண்டு டெக்ஸ் கதை வண்ணத்தில் ஒன்று என அறிவிப்புக்களாக பயணித்து...
* இந்த தீபாவளிக்கு 560 பக்கங்களில் 'டெக்ஸ்' புஷ்டியாய் வருகையும்...
* டெக்ஸ் வில்லரின் முக்கியத்துவம் டாப் கியரில் பயணித்து...
* கடைசியாக 'TEX தனி சந்தா..!' என்னும் விஸ்வருப நெடுங்சாலையை தொட்டிருக்கிறது..!
இந்த 'TEX' மோகம் இங்கேயே இப்படி என்றால்..? பூர்விக இத்தாலியில் எப்படி இருக்கும்...? அறுபத்தி ஐந்து கதைகளை படித்த நம் பயணமே இப்படி என்றால், ஆறுனுத்தி முப்பது கதைகள் கடந்து வந்த டெக்ஸ் வில்லரின் இத்தாலி பயணம் எப்படியிருக்கும்..? நம்பவே முடியாத, உங்களை 'ஜில்' ஆக்கும் தகவல்களை, கால எந்திரத்தில் பின்னோக்கி பயணித்து பார்ப்போமா..!!!
முப்பதாண்டுகள் கடந்தும், நம்மிடையே 'டெக்ஸ்' என்னும் தனிஒருவர் நம் மனதில், கொஞ்சம்கூட சலிப்பு தட்டாமல், அதே உற்சாகத்துடன், கம்பீரமாக வளம் வருகிறாரென்றால்... அவரை ரசிக்க தனி தடம் கேட்டு போராடி வென்று, இன்று நிற்கிறோமென்றால்...நம்மை அறியாமலேயே நம் மனதில் மையம் கொண்டுள்ள, அந்த டெக்ஸ் என்னும் சிங்கத்தின் வழித்தடத்தை கொஞ்சமேனும் தெரிந்து கொள்ளவேண்டாமா..!
யாராலும் அழைத்து செல்லவே முடியாத [ இந்த வரி கொஞ்சம் ஓவர்..] ஒரு ஆச்சரியமுட்டும் ஆரம்ப உலகிற்கு உங்களை அழைத்து செல்கிறேன்..வாருங்கள்..! அந்த சிங்கத்தின் உருவாக்கங்கள் பார்த்து சொக்கபோகிறிர்கள்..! ஒரு முன்அறிவிப்பு..உங்கள் டெக்ஸ் புத்தகங்களை பத்திரபடுத்திவைத்துவிட்டு பயணத்திற்கு தயாராகுங்கள்..! காரணம் இந்த பதிவின் முடிவில் உங்கள் 'டெக்ஸ்' பொக்கிசங்கள் களவு போகலாம்..உஷார்..! ஏனெனில் 'டெக்ஸ் வில்லரின் உண்மையான விஸ்வரூபத்தை தெரிந்து கொள்ளும் நண்பர்கள், அவரை வெறியாய் வேட்டையாட கிளம்புவிடுவார்கள்..! அதில் சிக்காமல் தப்பிப்பது உங்கள் சாமார்த்தியம்..கிளம்புவோமா..!
1948-ம் வருடம் துவங்கப்பட்ட போனோல்லி 'டெக்ஸ் வில்லரை எப்படி அறிமுகப்படுத்தினார்கள்..?
ஆரம்பத்தில் டெக்ஸ் காமிக்ஸ் இத்தாலியில்,எந்த வடிவத்தில் வந்தது...? எந்த வரிசையில் வந்தது..?
புத்தகவடிவங்கள் எந்த வருடங்கள்..எப்படி உருமாறின..? பழைய இதழ்களின் இன்றைய நிலை என்ன..?
டெக்ஸ் காமிக்ஸ் சேகரிப்புகளை இத்தாலி ரசிகர்கள் எப்படி செய்கிறார்கள்..?
போனோல்லி வெளியிட்ட வரிசைபடி, தமிழில் லயன் காமிக்ஸில் எந்த பெயரில் எப்போது வந்தது..?
66 வருட டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் பயணத்தில் நாம் எங்கு நிற்கிறோம்..? நம் ரசனை எங்கு நிற்கிறது..?
எந்ததெந்த தலைப்பின்கீழ் டெக்ஸ் கதைகள் தரம் பிரிக்கப்படுள்ளன..?
இன்னும்..இன்னும் பல கேள்விகளுக்கு ஆச்சரியமுட்டும் பதில்கள் அணிவகுப்பை தெரிந்துகொள்ளும்போது..நம் மனதில் 'டெக்ஸ் வில்லர்' ஏன் அசைக்கமுடியாத சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்ற உண்மை உங்களுக்கு புரியவரும்..! இப்படி ஒரு நாயகன் அறியும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து உங்கள் மனதில், பெருமிதம் புயலாய் கிளம்பும்..!
இனி நான் இங்கு கூறும் தகவல்களை திரட்ட மிக கடுமையாக உழைத்திருக்கிறேன், கவனத்துடன் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து பதிவிட்டுள்ளேன். இந்த தகவல்களை இத்தாலிக்கே சென்று ரூம் போட்டு தேடினாலும் கிடைக்குமா என்பது சந்தேகமே..! இதை சாத்தியமாக்கியது ஒன்றேஒன்று தான்..! அது நம் அனைவரிடமும் உள்ள அதே ஆர்வம்...எனக்குள்ளும் இருப்பதை தாண்டி வேறொன்றும் இல்லை..! தவறுகள் இருப்பின் சுட்டிகாட்டினால் தகவல்களை மேலும் மேம்படுத்துகிறேன்..!
ஜியோவானி லுயிஜி பனொலி என்ற இத்தாலி எழுத்தாளரால் 1948 ம் வருடம் நம் 'தல' டெக்ஸ் வில்லரை காமிக்ஸ் உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார்..! அவர் அப்படி டெக்ஸ் வில்லருக்கென்று தனி காமிக்ஸ் துவங்கும்போது, அவருக்கு வயது சரியாக முப்பது..! நம் கௌபாய் சிங்கத்தை உருவாக்கிய பிரம்மா இதோ...
செப்டம்பர்-30, 1948 ம் வருடம் டெக்ஸ் வில்லர் கதைகள், எப்படிபட்ட காமிக்ஸ் புத்தகமாக வெளிவந்தது என தெரிந்ததும் உங்கள் புருவங்கள் ஆச்சரியத்தில் நிச்சயம் உயரும்..! பேங்க் செக் புக் சைஸில் தான் முதல் முதலில் 32 பக்கத்துடன்...மங்கையர் மலர், ஆனந்தவிகடன் பத்திரிக்கையோட ஒரு சமையல் குறிப்பு, வீட்டு குறிப்பு என சின்ன இலவசஇணைப்பு வருமே, அதுபோலவேதான் டெக்ஸ் காமிக்ஸ் ஆரம்பத்தில் வந்தது என்றால் நம்பமுடியவில்லைதானே..! ஆனால் அதுதான் உண்மை..!
தகவலுடன் படங்கள் இதோ...
66 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட டெக்ஸ்வில்லர் காமிக்ஸ், குட்டி செக்புக் சைஸ் என்பது ஆச்சரியமாக இருக்கில்லையா..!! சரி அட்டைபடம் மட்டும் பார்த்தால் போதுமா..? அந்த குட்டி தொடர்காமிக்ஸ் புக்கின் முதல் பக்கம், முதல் டெக்ஸ் படம் பார்க்க யாருக்கு தான் ஆர்வமிருக்காது..? இதோ..அந்த வரலாற்று சிறப்புமிக்க துவக்கம்..! முதலில் b&w ல் வந்தாலும் பின்னர் வண்ணத்தில் வந்ததால், இப்போது கலர் மோகம் கன்னாபின்னாவென்று நம் காமிக்ஸ் காதலர்களிடையே வளர்த்திருப்பதால்...வண்ணத்தில் அந்த முதல் பக்கம் இதோ...
வரலாற்று சிறப்புமிக்க வாரஇதழாக டெக்ஸ்தொடர் காமிக்ஸ் வெளிவரத்துவங்கி, 100 இதழ்கள் கடந்தவுடன்...தொடராக இல்லாமல், முழுகதை கொண்ட 260 பக்கங்களுடன் மாத இதழாக, ஒரு தனி டிராக் போட்டப்பட்டது..!
அப்படி துவங்கப்பட்ட விவரங்கள் இதோ...
இந்த டெயிலி ஸ்ட்ரிப் 'ஸ்டைல்' காமிக்ஸ் புத்தகத்தின் சில படங்கள் இதோ...
இந்த குட்டி குண்டு புக் அட்டையில் நீங்கள் மஞ்சள் சட்டை மாவீரனை தானே தேடுகிறீர்கள்..? அதென்ன சிகப்புசட்டையில் ஒரு கௌபாய்..? இவர் வேறுயாரேனுமா..? என்ற சந்தேகம் ஒரு கணம் எனக்கும் வந்தது..! ஆனால் ஆரம்பத்தில் டெக்ஸ் வில்லர் சிகப்புசட்டையில், பச்சை கை க்ளவுஸ், கழுத்தில் கறுப்பு கர்சீப்பை கட்டிக்கொண்டுதான் வந்தார்..!
முதல் 12 இதழ்கள் வரையில் சிகப்புசட்டையிலும், 13 இதழில் முதல் முறையாக மஞ்சள் சட்டையில் மாவீரன் வளம் வந்தார்..! பின் சிகப்பு,மஞ்சள் என மாறி மாறி கிட்டதட்ட 1948 to 1971 வரை 23 வருடங்கள் அட்டைபடங்களில் இரண்டு கலர் சட்டையிலும் கலந்துகட்டினார்..!
டெக்ஸ் வில்லர் முதல் முதலில் மஞ்சள் சட்டையில் வந்த புத்தகமும், கடைசியாக சிகப்புசட்டையில் வந்த புத்தகமும் இதோ...
சரி விடாம வெளிநாட்டு விஷயமே பேசிட்டு போனா கொஞ்சம் போரடிக்கும்..நம் நாட்டு விஷயத்துக்கு வர்றேன்..! டெக்ஸ் தமிழ பேசின முதல் கதை எதுங்கிற அலசலை ஈஸியா செய்துவிடலாம். டெக்ஸ்வில்லரின் இத்தாலி வரிசைபடி எந்த கதை தமிழில் வந்ததுன்னு வரிசைபடுத்துவது ரொம்பவே கஷ்டமானது மட்டுமல்ல, ரொம்பவே பலன்களை தரக்கூடியது என்பதை மாத்தியோசியில் பளிச்சிட்டது..! அது என்னன்னா... 1970 களின் வந்த இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஸ்பைடர், ஆர்ச்சி கதைகளை இன்று எடுத்து படித்தால்...பலருக்கும் சிரிப்பும்,கொட்டாவியும் வரும் என்பதை சொல்லவேண்டியதேயில்லை..!
* இந்த பட்டியலில் அறுபது ஆண்டுகள் கடந்தும், டெக்ஸ் வில்லர் ஏன் சேரவில்லை..?
* இந்த கொட்டாவி பட்டியலில் 'டெக்ஸ் வில்லரும் சேருவாரா..?
* இல்லை சேருவதில் கொஞ்சம் காலதாமதம் ஆகுமா..?
* இல்லை காலத்தை கடந்து ரசிக்கும் இடத்தை பிடிக்க போகிறாரா...?
* அல்லது குறிப்பிட்ட காலகட்டத்தில் வந்தவை மட்டும் ரசிக்கும்படி இருக்குமா..?
உண்மையில் டெக்ஸ் வில்லர் என்பவர் யார்..? அவர் காமிக்ஸ் ரசிகர்கள் மனதில் எப்படி இந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றியுள்ளார்..??? இந்த டெக்ஸ் மோகம் நம்மை மயக்கும் மாயம்தான் என்ன..??? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, நாமே விடையை தேடிக்கொள்வதைவிட வேறென்ன சிறப்பு இருக்கமுடியும்..! அந்த விடையை தேட நான் கொஞ்சம் மாத்தியோசித்தில்...
இத்தாலியில், ஆண்டு வாரியாக வந்த டெக்ஸ் கதை வரிசைகள்படி...நமது லயன் காமிக்ஸில் எந்த கதை,எப்போது,எந்த வெளியீடாக வந்தது என இத்தாலி வரிசைபடி அலசுவதன் மூலமா...
டெக்ஸ் வில்லர் காலத்தை கடந்து நம்மால் எவ்வளவு காலம் ரசிக்கமுடியும்..? டெக்ஸ் பொக்கிஷமாக,ஒரு காலத்தில் போற்றப்பட்ட நாயகனாக, நினைவுகளாக மட்டும் மாறிவிடாமல்... எவ்வளவு காலங்கள் வரையில், படித்து சுவைகுறையாமல், ரசிக்கமுடியும் என்ற நுட்பமான அளவுகோலை தெரிந்து கொள்ளமுடியும்... என எனக்குள் ஒரு சிந்தனை மின்னல் வெட்டியதால்...
இத்தாலியர்கள் வரிசைபடி அலசலை துவக்குகிறேன்..!
இத்தாலியில் நவம்பர் 16,1957ம் வருடம் 32 பக்க, தொடர் வார இதழில் வந்த கதைதான், லயன் காமிக்ஸில் வந்த டெக்ஸ் வில்லரின் கதைகளிலேயே மிக பழைய கதை..!
அந்த ஆரம்பகால செக்புக் காமிக்ஸ் முகப்புகள் சில இதோ...
லயன் காமிக்ஸில் வந்த டெக்ஸ்கதைகளில், மிக பழைய கதை என நான் குறிப்பிடும், 1957-ம் வருட கதை எது என யூகிக்கமுடிகிறதா..! yes...அந்த கதையின் பெயர் பாலைவன பரலோகம்..! 58 வருடங்களுக்கு முன் இத்தாலியில்,மொத்தம் மூன்று மாதங்கள்,12 வார தொடராக செக்புக் சைஸில் வந்தன. அந்த கதை லயன் TOP 10 ஸ்பெஷலில், 1995ம் வருடம் வெளிவந்தது. அன்றை உங்கள் நினைவுகள் துள்ளி எழுந்து கிளம்ப,
கோடையில் வந்த லயன் TOP 10 அட்டைபடம் இதோ...
பின்னால்...1958 முதல், முறைபடுத்தபட்ட இத்தாலி TEX புத்தகங்கள் வரிசைபடி, A3சைஸில் 112 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது..! அப்படி வெளிவந்த வரிசையில், நான்குறிப்பிடும் 'பாலைவன பரலோகம்' கதை இரண்டு புத்தகங்களாக வந்தது. இத்தாலியில் டிசம்பர்,1966-ம் வருடம் 34 வது இதழில் முதல் பகுதி துவங்கியது..!
அந்த புத்தகம்,பக்கங்கள் இதோ...
35-வது வெளியீடாக ஜனவரி,1967-ம் வருடம் வந்த புத்தகத்தில் மீதி பாதிகதை இரண்டாம் பாகமாக வந்தது. அந்த புத்தகம் உங்கள் பார்வைக்கு இதோ...
428 பக்க நம்ம லயன் top 10 புக் ஒரு கிளிக் இதோ...
சமீபத்தில் அதே கதை கலரில், ஹாட்போர்டு அட்டையுடன் வெளியிடப்பட்டது, அந்த புத்தகத்தின் முகப்பு இதோ...
இந்த கலர்புத்தகத்தின் முகப்பு படங்கள் வரை இங்கே போட்டுவிட்டு, ஒரு வண்ண பக்கத்தை கூட போடவில்லை என்றால் எப்படி..?
நமது லயன் காமிக்ஸின் முதல் பக்கமும், இத்தாலி வண்ணபக்கமும் இதோ...
12 வார தொடராக வந்த இந்த கதையின் சுருக்கம் இதோ...
இது 12 வார தொடரில் முதல் பகுதி கதை மட்டுமே...! அடுத்து வரும் பகுதிகள் கொஞ்சம் கூட தொய்வேயில்லாமல்...இன்று படித்தாலும் பரபரப்புடன் பக்கங்கள் நகர்கின்றன..!1957ல் எழுதபட்ட இந்தகதை... அடுத்தடுத்து வரும் சம்பவங்களை, நபர்களை கோர்வையாக இணைக்கும் கதாசிரியர் நுட்பமான சாமர்த்தியமும், ஓவியமும் போட்டி போட்டுக்கொண்டு இரசிக்க வைக்கின்றன. இன்றும்கூட படித்து பார்த்தேன்...அவ்வளவு அருமையாக இருக்கிறது, உங்களிடம் இருந்தால் படித்துபாருங்கள் நண்பர்களே...டெக்ஸ் வில்லர் காலத்தை வென்று படித்து ரசிப்பதில் தேறுவாரா..??? என்ற விடை எளிதாக கிடைக்கும்..!
நம் நாட்டில் வந்த முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ் பழைய இதழ்களின் நிலை, அதை காமிக்ஸ் ஆர்வலர்கள் தேடி ஆடும் வேட்டை நமக்குதெரியும். இத்தாலியில் காமிக்ஸ் ரசிகர்கள் பழைய டெக்ஸ் இதழ்களை என்னதான் செய்கிறார்கள்...??? அங்கும் வேட்டைகள் உண்டா...? மறுபதிப்புகள் உண்டா..? என்ற தகவல்களை கொஞ்சம் பத்தவைக்கிறேனே..!
இன்று நமது சிவகாசி குடோனில் அரை கோடி ரூபாய் மதிப்புள்ள காமிக்ஸ் புத்தகங்கள் பண்டல் பண்டலாக தடத்தை நிரப்பிக்கொண்டுள்ளது எல்லோருக்கும் தெரிந்த தகவலே, அந்த குடோன் மதிப்புக்கு ஈடாக எத்தனை பழைய டெக்ஸ் வில்லர் இத்தாலி புத்தகங்கள் கொடுத்தால் ஈடாகும் என ஒரு கணக்கு சொல்கிறேன்...மீதியை நீங்கள் கணக்கு போட்டுக்கொளுங்கள்..!
1958 ம் வருடம் ரெகுலர் சைசில் வந்த முதல் 30 புத்தகங்களை இத்தாலியர்களுக்கு விற்றால் போதும், மொத்த சிவகாசி காமிக்ஸ் குடோனை வாங்கிவிடலாம். அல்லது செக்புக் சைஸ் 260 பக்கங்களில் வந்த டெக்ஸ்கதைகளின், முதல் பத்து புத்தகங்கள் விற்றால் போதும், மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து குடோனை காலிசெய்து விடலாம். அதுகூட வேண்டாம்...32 பக்கங்களில் வந்த முதல் செக்புக் சைஸ் காமிக்ஸ் புத்தகங்களை...ஹாஹா..வேண்டாம் நிறுத்திவிடுகிறேன், தலைசுற்றும்..அவ்வளவு விலை கொடுத்து வாங்க இத்தாலி டெக்ஸ் இரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்..! இதற்கென்று காமிக்ஸ் ஏலம் நடக்கிறது, அதிக ஆர்வமுள்ளவர்கள் நெட்டில் தேடிபார்த்துக்கொள்ளுங்கள்...அதை பகிர்ந்து இந்த தீபாவளி திருநாளில் உங்களை பதறவைக்காமல்...புத்தகங்களை பத்திரமாக பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டி, இந்த பதிவை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்..! மீண்டும் அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழத்துகள்..!
நட்புடன்,
மாயாவி.சிவா
சில வாழ்த்துக்கள்...
விளம்பரம்
அடுத்தடுத்து வரவிருக்கும் பதிவுகள்...
அடுத்து...
வேறென்னா பதிவு பற்றிய உங்கள் கருத்துக்கள்தான்..!