Monday 12 October 2015

சித்திரதொடர் சக்கரவர்த்தி திரு செல்லம்..! பகுதி-2

வணக்கங்கள் நண்பர்களே..!

கடந்த பதிவில் சித்திரதொடர் சக்கரவர்த்தி திரு செல்லம் அவர்களின் பெயர் இல்லாவிட்டாலும் கூட, அவரின் ஓவிய ஸ்டைல் தெளிவாக அடையாளம் காட்டும் சித்திரதொடர் பற்றிய குறிப்புகளுடன் பதிவை தொடங்கினேன்..! இந்த பதிவில் அவர் பெயர் போட்டாலும்கூட, ஓவியங்கள் அவரை அடையாளம் காட்டாத ஆரம்ப கால ஓவியங்களுடன் துவங்குகிறேன்.

வலைதளத்தில் தேடிய போது...செல்லம் [செல்லப்பன்] என்ற தன் பெயர் போடும் முன்பு, தன் மனைவி பெயரான 'விமலா' என்ற பெயரில் ஆரம்ப காலத்தில் வரைந்தார் என்ற சின்ன குறிப்பு மட்டும் சிக்கியது..! விமலா என்ற பெயரில் வரைந்த ஓவியங்கள் எதுவும் வலைதளத்தில் சிக்கவில்லை, மீண்டும் என் சேகரிப்பில் ஏதும் இருக்கா என மீண்டும் தேடிபார்த்ததில்...அபூர்வமான ஒரு சித்திரகதை கிடைத்தது.

குமுதம் வாரபத்திரிக்கையில், 1963-ம் வருடம் வெளிவந்த, ஓவியர் செல்லப்பன் அவர்களின் மனைவி பெயரில் வரைந்த சித்திரக்கதை உங்கள் பார்வைக்கு...


அதே போல் அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் அமையும் முன்பு, கல்கியில் 1964 ல் வரைந்த சித்திரதொடர் ஒன்றை பற்றிய விவரம் நெட்டில் கிடைத்தது. அதை நீரோட்டம் பிளாக்கில் பார்க்கலாம், ராஜயோகம் என்ற கதைக்கு, ஓவியர்செல்லம் என்ற பெயரில் வந்த சித்திரதொடரின் முதல் பக்கம் இதோ...
  

கோகுலம் சிறுவர் இதழில் வாண்டுமாமாவின் கூட்டணியில்,  ஓவியர் செல்லம்  வரைந்த சித்திர தொடர் அன்றைக்கு மெகா ஹிட் அடித்தது..! இந்த கூட்டணி வெற்றியை இரும்புக்கை மாயாவியின் அதிதீவிரமான ரசிகர் ஒருவர் கவனித்து கொண்டிருந்தார்..! சிறுவர் இலக்கியங்கள் பிரசுரம் செய்வதில் ரொம்பவே ஆர்வம் கொண்டவர் அவர்..! இரும்புக்கை மாயாவியை தமிழகத்தில் லட்சம் பேருக்கு அன்று தெரியுமென்றால்...இரும்புக்கை மாயாவிகென்று ஒரு ரசிகர் மன்றம் துவங்கினால், அதன் தலைவராக அவரை போடலாம்..! அவ்வளவு தீவிர ரசிகராக அவர் இருந்திருக்கவேண்டும்..! நான் இப்படி சொல்ல காராணம்...

பிரிட்டிஷார் இரும்புக்கை மாயாவி போலவே மின்சாரம் தாக்கினால் மறையும், மின்னல் மாயாவி என்ற சூப்பர் பவர் கொண்ட ஒருவரை உருவாக்கி, அவர் தமிழகத்தில் ஸாகசம் செய்யும் தரமான காமிக்ஸ்களை தமிழகத்திலேயே உருவாக்கினார் என்பதே..!

டெக்ஸ் வில்லர் ரசிகர்களுக்கு, "டெக்ஸ் அமெரிக்க மண்ணில் தான் ஸாகசம் செய்வாராக..? நம் மண்ணில் ஸாகசம் செய்யமாட்டாரா..!!! " என்ற ஏக்கம் ஒவ்வொரு ரசிகருக்கும் இருக்கத்தானே செய்யும்..! அப்படித்தான் இரும்புக்கை மாயாவியின் புத்தகங்களை வெளியிட்டு வந்த பதிப்பாசிரியர் 'முல்லைதங்கராசன்' இரும்புக்கை மாயாவியை தமிழகத்தில் ஸாகசம் செய்ய வேண்டும் என்ற, கனவு கண்டார் என தோன்றுகிறது..!

அவர் கனவுக்கு உருவம் கொடுக்க சரியான ஓவியரை தேர்ந்தெடுத்து, மாயாவியின் மேல் கொண்ட தீராத காதலில், அவரே கதை எழுதி, மறையும் இரும்புக்கை உள்ள மின்னல் மாயாவியை உருவாக்கி காமிக்ஸ் ஆக வெளியிட்டார்..! ஆகஸ்ட்,1976 வருடம், அவர் துவங்கிய மாயாவி காமிக்ஸ் மூலமாக மின்னல் மாயாவிக்கு அட்டகாசமாக உருவம் கொடுக்க, அவர் தேர்ந்தெடுத்த அந்த ஓவியர் திரு செல்லம் அவர்களே தான்..!




உடல் சிலிர்க்கும் சாகசங்கள் ! உயிரோட்டம் நிறைந்த சித்திரங்கள் !
என விளம்பர வாசகங்களுக்கு ஏற்பவே கதையும், ஓவியங்களுக்கும் போட்டிபோட்டன. பின்னாளில் அவை மதி காமிக்ஸாக வந்த அட்டைபடங்களிலும், காமிக்ஸ் படங்களிலும், திரு செல்லம் கைவண்ணம் உங்கள் பார்வைக்கு..! முத்துகாமிக்ஸ் இரும்புக்கை மாயாவியை மறுபதிப்பிலாவது இப்போது பார்க்கிறோம், ஆனால் இது போன்ற ஆர்வலர்களின் படைப்புகள் காலவெள்ளத்தில் புதைந்தே போய்விட்டன...!




இரும்புக்கை மாயாவி போலவே, இரும்புக்கை உள்ள மின்னல் மாயாவியும் மின்னல், கதிர் வீச்சு தாக்கினால் மறைந்துவிடுவார். அவருக்கு சக்தி தேவைபட்டால் இரும்பு விரலில் உள்ள ஆண்டெனா மூலமாக செய்தியனுப்புவார். அந்த செய்தி பால்வெளியில் சுற்றும் மின்னல் கிரகவிண்கலனுக்கு போய் சேரும், அடுத்தநொடி விண்கலனில் இருந்து செயற்கையான ஒரு மின்னல் அவரை தாக்கும்...உடனே அவர் மாயமாய் மறைந்துவிடுவார்..என அட்டகாசமான கற்பனை அம்சத்தை உணர சித்திர சக்ரவர்த்தியின் சிலபடங்கள் இங்கே போட்டுள்ளேன், படித்தால் உடனே புரிந்து கொள்வீர்கள்..! 




இது ஓவியபதிவு என்பதால் சின்ன அறிமுகத்துடன் நிறுத்திவிடுகிறேன், மேல் விவரங்களுக்கு கீழ்கண்ட  ப்ளாக்கில் நண்பர்கள் மின்னல் மாயாவி பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள்..!




ரசிக்க சில மின்னல்கள்....






திரு.முல்லை தங்கராசன் மின்னல் மாயாவியை தொடங்குவதற்கு முன்பு, மே,1976-ம் வருடம் 'மணிப்பாப்பா' என்ற 30 காசு விலையில் மாயாஜால கதைகளுக்கும், சிரிப்புகதைகளுக்கும் கொண்ட குட்டி மாத இதழை, அட்டகாசமான மாத இதழ் துவங்க வெள்ளோட்டம் பார்த்தார்..! அதேசமயத்தில் 60 காசு விலையில் வண்ணசித்திரகதைகளுக்கும் அட்டகாசமான ஓவியங்களை வரைந்து கொடுத்தார், தொடர் சித்திர சக்கரவர்த்தி..!






 ஜம் ஜாம் ஜாக் கதையின் உள்பக்கங்கள்...







சித்திரங்கள் பார்த்தாலே கதைகளை படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் வசீகரம்படைத்தவைகள் திரு செல்லத்தின் ஓவியங்கள் என்பதை நீங்களும் படங்களை பார்த்ததும் உணர்ந்திருப்பிர்கள்..!

மணிப்பாப்பா சிறுவர் இதழில் வந்த சில சிரிப்புகள்...




1976-ம் ஆண்டுமுதல் 1978 வரையில் முல்லை தங்கராசன் அவர்களும் ஓவியர் செல்லம் அவர்களும் இணைந்து, விதவிதமான முயற்சியில் சிறுவர் இதழ்ககளை வெளியிட்டார்கள்..!

1979-ம் வருடம் ஒரு முக்கியமான வருடம்..! காரணம் அடுத்தபடத்தை படியுங்கள்...


1979-ம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் வருடமாக அறிவிக்கப்பட்டதை, அதற்கென்று சில சலுகைகள் அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து, திரு முல்லை தங்கராசன் மிக சரியாக அந்த ஆண்டை பயன்படுத்திக்கொண்டார்..! சிறுவர்களுக்கான ஒரு அட்டகாசமான வண்ண மாத இதழை ஒன்றை துவங்கினார். அந்த இதழுக்கு ஆஸ்தான ஓவியர் திரு செல்லம் அவர்களே..!

எனக்கும் அந்த ஆண்டு முக்கியமானதே..! காரணம், சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எல்லா பள்ளிகளிலும் கதை கட்டுரைகள் எழுதும்,ஓவியங்கள் வரையும் போட்டிகள் நடத்த அரசு அறிவிப்புகள் வந்தன..! அப்படி பள்ளியில் நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொள்ளவைக்கவேண்டியே என் தந்தை பள்ளிக்கு அழைத்து ஓவிய பொருட்கள் வாங்கிதர சொன்னார்கள்..! வாட்டர் கலரிங்' வாங்கித்தர சொல்லியும், அதை பயன்படுத்த சொல்லிதரவும் சொன்னார்கள்..! அதை வாங்கித்தரவே என்னை 'சாமுண்டி சூப்பர் மார்கெட்டிற்கு என் தந்தை அழைத்து சென்றார்..! அங்கு சென்றதால் தான் அந்த லைப்ரரியில் tin tin பார்க்கமுடிந்தது. அந்த தாக்கம் 'பலேபாலுவின் அறிமுகம்...அதை தொடர்ந்து  காமிக்ஸ் உலகில் என் பிரவேசம்..!


நன்றி: டெக்ஸ் விஜயராகவன்

சரி ஓவியர் ப்ளாஸ்பேக்கிற்கு வருவோம், திரு முல்லை தங்கராசன் துவங்கிய அந்த சிறுவர் இதழ் 'ரத்னபாலா'..! அந்த இதழ் வருகையை விளம்பரபடுத்த ஓவியர் செல்லம் அவர்கள் கைவண்ணத்தில், ஒரு கோலாகலமான வண்ண விளம்பர போஸ்டர் சுவரொட்டியில் அழங்கரித்தது..! அது இன்றும்கூட பசுமை, காரணம்..தெரு முனையில் இருக்கும் கோவில் சுவரில் சினிமா போஸ்டர்கள் ஓட்டப்படுவது வழக்கம்.  கோவில் மணி 'டங்..டங்' என ஒலிக்கத்துவங்கியதும், அரைடவுசரில் ஒரு பட்டாளம் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் வரிசையில் நின்று வாங்க போட்டி போடும்..! அப்போது தவறாமல் சுவரொட்டியை பார்ப்பேன். வித்தியாசமாக நான் ஒருநாள் பார்த்த சுவரொட்டி என்னை மயக்கியது..! அந்த விளம்பரம்...


'ரத்னபாலா' இதழ் விளம்பரத்தை தொடர்ந்து, எனக்கும் சீனியர்கள் அந்த வண்ணஇதழில் வந்த கதையை சிலாகித்து சொல்லகேட்டிருக்கிறேன். அன்று பார்த்த செல்லம் ஓவியங்கள் என் ஓவிய ஆர்வத்தையும், காமிக்ஸ் மோகத்தையும் சமமாக வளர்த்தன. பள்ளியில் என் ஓவியம் ஏன் பாராட்டப்பட்டது...??? சகல வசதியுடன் தனியாக அமரவைத்து, அதுவும் தரை பலகையில் அமரும் என்னை, முதல்முறையாக ஆசிரியர் அமரும் மேஜை நாற்காலியில் அமரவைத்து, ஏன் வரைய செய்தார்கள்...? என அப்போது புரியவில்லை. பின்னாளில் பரிசாக 'பஞ்சதந்திரகதைகள்' புத்தகம் ஒன்று கொடுத்து மேடையில் பாராட்டியபோது...உணர்ந்த பாராட்டு தந்த சுவை, அந்த வயதில் திரும்ப திரும்ப மனசு கேட்டும் சுவை..! அந்த சுவைக்காக செய்த, நேர்த்தியான உழைப்பு பின்னாளில் பழக்கமாகவே ஊறிவிட்டது..!

நேர்மையான, நேர்த்தியான உழைப்பு ஏற்படுத்தும் தாக்கம், மனிதர்களின் மனதில், தனி சிம்மாசனத்தில் அமரவைக்கும் என்பதற்கு தொடர் சித்திர சக்கரவர்த்தி திரு செல்லம் ஒரு கம்பீரமான உதாரணம்..!

பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், ஓவியரின் நாலுகால் பாய்ச்சல் படைப்புகள் பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்..!

நட்புடன்,
மாயாவி. சிவா